More than a Blog Aggregator night writter: November 2020

Saturday, November 21, 2020

பண்டிகை 

பண்டிகைகள் மனிதனுக்கு மட்டற்ற மன மகிழ்ச்சியை தரும். அதற்கு முதன்முதல் காரணமாய் நான் எண்ணுவது  கொண்டாட்டம். அக்கொண்டாட்ட மன நிலையை கூட்டுவது - கூடியிருத்தல், சொந்தம் சூழ கூடி கும்மியடிப்பது (பண் இடுகை மருவி பண்டிகை என்றானதோ) மன நிறைவை, மகிழ்வை அதிகரிக்கும் செயல்கள். அன்பை, மகிழ்வை பரிமாறி கொள்வதில் உள்ள ஆனந்ததிற்கு என்றும் அளவேயில்லை.

என் பள்ளிக்கால பண்டிகை விடுமுறை நாட்களில் குடும்ப சொந்தங்கள் எல்லோரும் ஒன்று கூடி  கூத்தடித்தது இன்றும் என் நினைவில் பதிந்த பசுமையான, இனிமையான தருணங்கள்.

 பசுமை வயலில் சாமி கும்பிட்டது 

பனங்காய் பறித்து தின்றது 

பம்செட்டில் குளித்தது 

என்று என்றும் மறக்க முடியா மலரும் நினைவுகள் அவை. 

தபால் கார்டு மூலம் வாழ்த்து எழுதி போட்டு, 

                                                           பெற பெற்று 

                                                           அதை சேர்த்து வைத்து 

அழகு பார்த்தல் ஒரு கவித்துவமான நிகழ்வுகள்.  இவை இன்று இணையத்தால் இழந்தவை என்று குறை கூறுவதற்கு பதில், அதை இணையத்தில் இணைத்து பார்க்க, இவ்வாண்டு தீபாவளியில்  ஓர் சிறு முயற்சி செய்து பார்த்தேன். நான் பகிர்ந்து கொண்ட அணைவரும் என்னை வெகுவாய் பாராட்டிய பொழுது பாலிய வயதிற்கே சென்றேன்.

கார்டு போட்ட காலம் போய் போனில் எல்லாம் முடித்துக் கொள்ளும் காலமும் வந்தது. மூச்சுக்கு முந்நூறு தடவை போன கிராமத்துக்கு, முடிந்தால் மட்டுமே போவது என்றானது. ஆனால் போகின்ற ஒவ்வொரு முறையும் வட்டியும் முதலுமாய் சேர்த்து வைத்து கொண்டாடி தீர்த்து விடுவது வழக்கமாய் ஆகிவிட்டது. 

டெல்லியில் இருந்தபோது ஹோலி கொண்டாடியது ஒரு புது அனுபவம். ஊரே உற்சாகமாய் இருக்கும், அது நம்மையும் தொற்றி கொள்ளும். தெரியாத ஊர் - பழகாத மக்கள் - புரியாத மொழி - அறியாத பண்டிகை என்பதையெல்லாம் தாண்டி நம்மை உள்ளிழுத்து கொள்ளும் சக்தி பண்டிகைகளுக்கு உண்டு. அதன் மூலம் புது உறவகள் பிறக்கும், வலுவாகும், அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும். ஊரு விட்டு ஊரு போன பின் தான் தொலைபேசி வாழ்த்தின் மகிமை உணர்தேன். புது துணி அணிவதில் கிடைக்காத உற்சாகம், தின்பண்டகளில் கிடைக்காத மன மற்றும் வயிற்றின் நிறைவு தாய் தந்தையிடம் இருந்து வரும் அந்த தொலைபேசி குரலில் நிறைவடையும். வாழ்க அறிவியல்.

நாடு விட்டு நாடு சென்ற போது(UK) கொண்டாடிய பண்டிகை halloween. அவ்விரவு முழுவதும் தூங்காமல் எலும்பு கூடு ஆடை அணிந்து அலைந்தது ஒரு திகில் அனுபவம்.  இன்று என் மகனின் விருப்ப விழாக்களில் halloweenவியனும் ஒன்று. வெவ்வேறு பண்டிகைகள் உலகம் முழுக்க இருந்தாலும் அவற்றில் ஒரு ஒற்றுமை உண்டு, அது பகிர்தல். வெறும் கூடை எடுத்து ஒவ்வொரு வீடாய் சென்று அதில் இனிப்பும் பரிசுமாய் நிரப்பி கொண்டு வரும் சிறுவர்களின் மன நிறைவும் மகிழ்சசியும் சொல்லில் அடங்காது, சொல்லியும் புரியாது. கொடுப்பதிலிலும், பெறுவதிலும் உள்ள உள்ளுணர்வு ஓர் உயர்ந்த உணர்வு. 

இருக்கும் பண்டிகைகளிலே எனக்கு மிகவும் பிடித்த ஒன்று பொங்கல். காரணம் 
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது 
அன்றே மறப்பது நன்று 
என்ற முப்பாட்டன் வள்ளுவன் வாக்குக்கு சான்றாய் கொண்டாட படும் ஒரு பண்டிகை பொங்கல். விருந்தோம்பலில் சிறந்த நம் சமூகம் நன்றி நவிழ்த்தலை நாட்கணக்காய் கொண்டாடி தீர்க்கும் சிறப்பு வாய்ந்த பண்டிகை அல்லவா இப்பொங்கல் பண்டிகை. கரும்பு தின்ன கூலியா என்ற எண்ணம் எழுகிறது பொங்கலை பற்றி எண்ணுகையில்.
பழையன கழிதலும் புதியன புகுதலுமே, பூமி என்றும் புத்துயிருடன் இருக்க காரணம். அதையே நாம் போகி பண்டிகையாய் கொண்டாடி மகிழ்கின்றோம். அப்படி ஒரு பழைய சம்பவமான புத்தாடை தைத்து போடும் பழக்கத்தில் இருந்து விடுபட்டு முதன்முறையாய் ஆயுத்த ஆடை நான் அணிந்தது 90களின் தொடக்கத்தில். அப்பொழுதெல்லாம் விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் முதல் நாளில் வண்ண ஆடை அணிந்து செல்ல அனுமதி உண்டு. அப்படி ஒருமுறை பண்டிகை ஆடை (readymade)  அணிந்து பள்ளி சென்ற நாளில் கிடைத்த அனுபவம், அனைவரும் ஆச்சிரியமாய் பார்த்த சமயம், ஏதோ பெரும் சாதனை சாதித்த உணர்வு என்னுள். இன்று மீண்டும் customise tailoring எனும் வட்டத்தில் வந்து நிற்கின்றோம்.

விடலை பருவத்தில் பண்டிகைகளை வீட்டில் கொண்டாடுவதற்கு பதிலாய் சினிமா தியேட்டர்களில் கழித்த காலமும் எனக்குண்டு. திருச்சி மாரீஸ் போய்விட்டால் போதும் 1 நாளைக்கு 3 படம் பார்த்து விடலாம். படம் பார்க்கும் மகிழ்ச்சியை விட முதல் நாள் முதல் ஷோ என்னும் மயக்கம் தான் மேலோங்கி இருந்தது. படமும் புரியாது, பணம், நேரம் விரயம் வேறு, என்று புரிந்த பின் அந்த பழக்கமும் மாறியது.

தொலைக்காட்சிகள் கோலோச்ச தொடங்கிய நேரம். பல பண்டிகைகள் அதன் முன்னே கழித்தேன். காலை பட்டிமன்றம் தொடங்கி இரவு சிறப்பு திரைபடம் வரை கண்டு  கழித்த காலமுண்டு. அதுவும் சலித்து போய் மீண்டும் பண்டிகையை பண்டிகையாய் கொண்டாடி வருகிறேன் இப்போதுவரை. காரணம் ஒன்னும் பெருசா இல்லை, எல்லாம் அறிவியல் முன்னேற்றம் தான். ஏதும் எப்போவும் இணையத்தில் இருக்கும் போது அந்த நாளுக்கான முக்கியத்துவம் கொடுத்து பண்டிகையை சிறப்பாய் கொண்டாடுவது, சிறு பிள்ளைகளுக்கு அப்பழக்கத்தை ஊட்டுவது அவர்களுடன் சிறுவர்களாய் மாறி சில மணி நேரம் மகிழ்வாய் கழிப்பது என்றிருக்கின்றேன்.
வாழ்வை வளமாக்கும் பண்டிகைகளை கொண்டாடுங்கள், மகிழ்ந்திருங்கள்.





   

இக்கட்டுரை பிரதிலிபி போட்டிக்கு எழுதியது.