More than a Blog Aggregator night writter: April 2020

Thursday, April 30, 2020

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் 

#tccontest2020
யாதும் ஊரே யாவரும் கேளிர்
இப்படி சொல்ல வேண்டும் என்றால் பூங்குன்றனார்  உள்ளம் எவ்வளவு பெரியதாய் இருக்க வேண்டும். உலகமே உறவு என்ற கூற்றை நம் மனதில் ஆழ பதித்துக் கொண்டு  கட்டுரைக்குள் செல்வோம்.

உறவில்லா உயிர் உலகிலில்லை. இரு உயிர் கொண்ட உறவில் உதிப்பதே ஓர் உயிர் (மகர்ந்த சேர்க்கை விதிவிலக்கு). தாய் தந்தை உறவை தாண்டி, விலங்கில் இருந்து மனிதம் மேன்மை பெற இக்குடும்ப உறவுகள் உரம் இட்டன என்றால் மிகை அல்ல.

வாழ்க்கை சக்கரம் சுழல அனைத்து உறவும் தேவை. அச்சான்னியாய் நான் கருதும் உறவு வாழ்கை துணை.

பெற்றோர் உறவில் இருக்கும் அன்பு,
உடன் பிறப்பில் உள்ள பாசம்,
நட்புறவில் இருக்கும் அன்னோன்னியம்,
மாமன்,அத்தை உறவில் இருக்கும் உரிமை,
தாத்தா பாட்டி உறவில் இருக்கும் கரிசனம்,
என்று எல்லா உறவில் இருக்கும் அம்சங்களும்
மற்றும் இவை எவற்றிலும் இல்லா ஓர் உறவு - வாழ்கை துணையில் மட்டுமே கிடைக்கும்.

 என் வாழ்க்கையில் நடந்ததை எடுத்துக்காட்டாய் சொல்ல விரும்புகிறேன்.பதின் வயதில் காதல் கொண்டேன், உறவுக்காரப் பெண் தான் என்றாலும் வேறு மாநிலத்தில் வசித்த அவள் குடும்பத்துக்கும் எங்களுக்கும் அவ்வளவாய் தொடர்பு இருந்ததில்லை. எனவே முதலில் அத்தொடர்பை பலப்படுத்தினோம் (ஜோடி, பூவெல்லாம் உன் வாசம் அளவுக்கு இல்லை என்றாலும்). பல வருட காத்திருப்புக்கு (பெற்றோர் சம்மதத்திற்காக) பின் திருமணம் முடிந்தது. திரை கடல் ஓடி திரவியம் சேர்க்க அயல் நாட்டில் இருந்ததால், பிரிவில் சில வருடங்கள் கழிய நேர்ந்தது. இப்பிரிவுகள் அப்போது வலி தந்தாலும், இப்போது நினைக்கையில் வலியினுடே வலுவும் சேர்த்திருக்கின்றது என்பதே உண்மை. 

ஆசை 60 நாள் மோகம் 30 நாள் ஆக மொத்தம் 90 நாட்கள். இன்னாட்களில் துணையின் பலம் பலவீனம் தெரிந்துக் கொள்ள வேண்டும். பலத்தை பெரிதுப் படுத்தி பெரிய ஆளாய் மாற்றா விட்டாலும், பலவீனத்தை குறைக்கா விட்டாலும் பெரிது படுத்தாமல் இருத்தலே நலம். என் பலவீனம் எனக்கு தெரிந்ததை விட என்னவளுக்கு நன்றாக தெரியும். அதை சீண்டாமல் இருக்க காரணம் காதலியே துணைவியாய் அமைந்ததே.

அவள் குறையை நான் குறை கூறுவதில்லை. காரணம் காதலன் என்பது மட்டுமல்ல அவையாவும் அவ்வளவு பெரிய குறை அல்ல என்பதுவுமே. இதை தான் காதல் கண்னை மறைக்கும் என்பார்களோ.
ஒரு உறவில் எல்லா வித உணர்வுகளும்
சதவிகிதத்தில் இருக்க வேண்டும். அவள் என் மீது கோவப்படுகின்ற போது ஏனோ நான் அமைதியாய் இருந்து விடுகின்றேன்.
அவளை பிரிந்து நான் சேர்க்கின்ற பணம் பயன் அற்றது என்பதை அறிவதற்கே சில காலம் கழிந்துவிட்டது. இளமையில் அனுபவிக்காத காதல், கலவி, காமம் எல்லாம் கண் கெட்ட பின் செய்யும் சூரிய நமஸ்காரம் தான். அவளை என்னுடன் அழைத்துச் செல்ல முடியாத சூழலில் நான் இந்தியா வந்திட முடிவு செய்தேன். இதில் என் சுயநலம் தான் முழு காரணம், ஆனால் பழி ஏற்றுக் கொண்டது அவள். வேலை கிடைப்பது எளிதாய் இருந்தாலும் அவையாவும் மீண்டும் எங்களை பிரிப்பதாய் அமைய சொந்த தொழில் தொடங்கினேன். பெரிய இலாபம் இல்லாவிட்டாலும் இன்பமாய் கழிந்த நாட்கள் அவை. தொழிலில் பக்க துணையாக அவளிருந்தாள், பக்கத்திலே இருந்தாள். விதி எங்களுக்கு வேறி வழி திறந்து விட்டது. மீண்டும் வெளிநாட்டு வாசம்.
NRIகளுக்கு இருக்கும் நன்மையும் தீய்மையும் - இங்கே 'நமக்கு நாமே' என்றிருப்பது. 

பிரசவ அறையில் அவள் கூட நான் இருந்தது அவளுக்கு பெரிய பலத்தை தந்தது. எனக்கு அவள் மேல் பெரிய மரியாதை, பாசம், இனி இவளை கண்ணீர் சிந்தவே விட கூடாது என்ற வைராக்கியம் தந்தது. என் தாய் பட்ட வேதனை நினைவில் வந்தது.  அதன் பிறகு பெண்களை பார்க்கும் விதம் மாறியது. 
இதை - பட்ட பின் திருந்தும் புத்தி என்றும் சொல்லலாம்.

காதலியாய் அவளை கொஞ்சியதை விட
மணைவியாய் அவளை உச்சி முகர்ந்ததை விட 
தாய்மையாய் அவளை கொண்டாடியது பேரின்பம். 

பேராண்மை என்னும் சொல், ஆண்களுக்கானது  மட்டும் அல்ல அது தாய்மையை குறிக்கும் போது தான் முழுமை அடைகின்றது


Friday, April 24, 2020

ஜோதிகா சொன்னது 

என் பார்வையில் 👇. கிட்ட தட்ட ஜோ சொன்னதின் MEME வடிவம். 














ஆனா அவுங்க இதை விட அழகா - மருத்துவமனை, பள்ளிக்  கூடங்கள் எல்லாம் ஜெய்ப்பூர் மாளிகை போல், தஞ்சை பெரிய கோவிலை போல் இருக்க வேண்டும். அதற்கு நன்கொடை கொடுங்கள் என்று தான் கூறினார்.

அதற்கும் நன்கொடை கொடுங்கள்.

Monday, April 20, 2020

தூய தமிழன் 

காறி உமிழன் 

பேட்டி 

எனக்கு ஒரு கனவு இருந்தது தூயத்தமிழ் பிள்ளை திரு காறி உமிழனை பேட்டி எடுக்க வேண்டும் என்று.
தூக்கத்தை கெடுத்த அந்த கனவு ஒருநாள் நிறைவேறியது. அந்த பேட்டி உங்களுக்காக இதோ 👇

வணக்கம் திரு காறி உமிழன் 
இந்த கொரோனா வைரசுக்கும் இல்லுமினாட்டிகளுக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றீங்க, கொஞ்சம் விளக்க முடியுமா?

காறி உமிழன் : கண்டிப்பா இது இலுமினாட்டிகளின் சதி தான். எப்படினா உலக மக்கள் தொகையை கம்மி பண்ணுவதில் அவங்க இப்ப இறங்கி இருக்காங்க. அதற்கு அவர்கள் கையில் எடுத்து இருக்கும் ஆயுதம் தான் இந்த வைரஸ் தொற்று. 

 நாம் : இந்த வைரஸை முதலில் சீனாவில்  பரப்ப காரணம், அங்கு மக்கள் தொகை அதிகம் இருப்பதாலா?

காறி உமிழன் : இல்லை. இதை உருவாக்கி பரப்பியதே சீன இலுமினாட்டிகள் தான். மக்கள் தொகையை கம்மி பண்ணுவது மட்டுமல்லாமல் அவர்கள் கைவசம் இருக்கும் அதிநவீன 5gயை மக்கள் அனைவரும் பயன் படுத்த வைக்க வேண்டும் என்பதும் அவர்களின் குறிக்கோள்.

ஒரு சின்ன எடுத்து காட்டு - கணினி துறையில் பலர் work from home எனும்  முறையில் வேலை செய்வதை அறிந்திருப்பீர்கள்.  
இந்த கொரோனாவால் இன்று அலுவல் சந்திப்புக்கள் மற்றும் பள்ளி படிப்புகள் என்று பல விதமான வேலைகளும் இணையம் வழியே நடக்கின்றது. அதை சாத்திய படுத்தியது 4g. 

இப்போது 5gக்கு வருவோம்.  5g என்பது சராசரி நிலைக்கும் உயர்ந்த தொழில் நுட்பம். அதை கொண்டு பல வியக்கத்தக்க செயல்கள் செய்ய முடியும். ஒருவரால் இருந்த இடத்தில் இருந்தே எல்லா வேலைகளையும் செய்ய முடியும். அதை கொண்டு இவர்கள் செய்ய நினைப்பது, மனித தொடர்புகளை முதலில் அழிப்பது. 
ஓட்டுனர் இல்லாத வாகனங்கள், மனித தயவு மிக மிக குறைந்த அளவே பயன் படுத்தும் எந்திரங்கள்  என்று அதன் வீச்சு மிகப் பெரியது.

இனி வரும் காலங்களில் என்னவெல்லாம் நடக்கும் என்றால்  

⏩இதில் முதலீடு செய்ய தயங்கியப் பெரு நிறுவனங்கள் இனி முதலீடு செய்வார்கள்.

⏩அலுவலகங்கள் நடத்த இடங்கள் தேவைப்படாது. எனவே அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தேவையும் குறைந்து விடும். பல தொழில்கள் அழியும்.சமுதாய சங்கிலி அறுபடும்.

இதன் பின் விளைவுகளை நீங்களே கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். 
தன்னுடன் வேலை பார்ப்பவர் யார் என்று யாருக்கும் தெரியாது. விளைவு-தொழில் சங்கங்கள் இல்லாமல் போய்விடும். 
மணி நேர ஊதியம் என்பதை ஒழித்து, பணி முடித்தால் மட்டுமே ஊதியம் என்றாகிவிடும். மிகை நேர (overtime) ஊதியம் என்பதே இல்லாமல் போய்விடும். ⏩இப்படி இதனால் ஆதாயம் அடையப்  போவது பெரு நிறுவனங்களே. 

⏩virtual reality மூலம் நீங்கள் உலகின் எந்த இடத்தையும் உங்கள் கண் முன் கொண்டு வரலாம், கூடவே அங்கு நிலவும் தட்ப பெப்ப நிலை, சுற்று சூழல், சத்தம் என்று நீங்கள் அங்கு நேரில் சென்றால் எப்படி இருக்குமோ அப்படியே உணர்வீர்கள். சுற்றுலா என்பது அரிதாகி விடும். அதை சார்ந்த பல தொழில்கள் காணாமல் போக சாத்தியம் அதிகம்.
உற்பத்தி சாரா அலுவல்கள் எல்லாம் இனி வீட்டில் இருந்தே செய்ய வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்  படுவோம்.

இன்னும் நாம் கற்பனை செய்ய முடியாத பல காரியங்கள் சாத்தியம் ஆகும்.

ஆனால் இதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். இன்றைய மக்களின் மன நிலைமை அதற்கு ஏற்றதாய் இல்லை, எனவே அவர்களை இதற்கு பழக்கப் படுத்த வேண்டும்.அதற்கான பிள்ளையார் சுழியே இந்த ஊரடங்கு அல்லது வீட்டிலேயே அடங்கு என்ற உலகடங்கு பின்பற்றப்  படுகின்றது.  

மனிதரை இத்தொழில் நுட்பத்துக்கு பழக்கி, அடிமை ஆக்கி, வீட்டிலேயே முடக்கி இவர்கள் சொல்வதை எல்லாம் செய்யும் பொம்மை ஆக்குவதே இவர்களின் முதன்மையான பெருந்திட்டம். 

மேலும் இது நிறுவங்களின் செலவை குறைத்து பெரு இலாபம் ஈட்டும் செயல்.

கூட்டமாய் இருந்தால் ஆடுகளும் சிங்கத்தை துரத்தி அடிக்கும். அதுவே தனித்து விடப் பட்ட யானை பலியாகும்.

இலுமினாட்டிகள் இப்போது செய்வது நம்மை தனிமைப்படுத்தி, அதை நம் புதிய வழக்கமாய் மாற்றுவதே.

நாம் : அப்படியானால் இந்த வைரஸை அழிக்கவே முடியாதா? மேலும் இந்த ஊரடங்கை பின் பற்ற கூடாதா ?

காறி உமிழன் : இலுமினாட்டிகள் இதற்கான காலக்கெடுவை ஏற்கனவே தீர்மானித்து வைத்து விட்டார்கள். அரபு தேசத்து வளமே எண்ணெய் தான். போக்குவரத்தை பெரும் அளவு குறைத்து விட்டால் எண்ணெயின் தேவை கம்மியாகி விடும், அவர்களின் வளம் குறைந்து விடும்.
அவர்களின் இலக்கை அடைந்த உடன் இந்த வைரஸை அழித்து விடுவார்கள். 
 நாம் இந்த ஊரடங்கை கண்டிப்பாக கடைபிடித்தே ஆக வேண்டும். ஆனால் அவர்கள் சொல்லும் தொழில் நுட்பத்தை முற்றிலுமாய் தவிர்க்க வேண்டும்.  நம் தமிழ் முன்னோர்கள் கடைப்பிடித்த உழவு, கால் நடைப் பராமரிப்பு என்ற தற்சார்பு வாழ்வையே வாழ வேண்டும். அதுவே நாம் அவர்களை வெல்லும் உத்தி. இப்படி ஒவ்வொரு தமிழனும் வாழ வேண்டும் என்பதே என் கனவு.

நாம் : உங்கள் கனவு நம்மை பின் நோக்கி இழுத்து செல்லாதா - என்னும் போதே பின் மண்டையில் ஓர் அடி "பகல்ல தூங்குறதும் இல்லாம கனவு கனவுனு கனவுல பொலம்பல் வேற"-னு மனைவி உலுப்ப எழுந்து உட்கார்ந்துட்டேன்.

ச்சே... வெறும் கனவா.... அதும் பகல் கனவா ..... அப்ப பலிக்காது என்ற மனநிறைவுடன் விடைபெற்று கொள்கிறேன்.







Thursday, April 16, 2020

Meme முயற்சி -2



திடீர் சைவ உணவுக்கு மாறியவர்களை பார்த்து 

👇

👇

 



திடீர் சமையல் காரர்களாய் மாறியவர்களை பார்த்து








மற்றவர்களை பற்றி சொன்ன பின் என்னைப்  பற்றி சொல்லாமல் இருக்க கூடாது

 👇

👇





Friday, April 3, 2020

சொல்லுக சொல்லை 

தமிழ் சொல்லும் parasite வார்த்தைகளும் 

ஒரு மொழி தோன்றவும் அழியவும் சொல்லே இன்றியமையாதது. பல parasite ஒட்டுண்ணிச்  சொற்களுக்கு ஓர் மொழி இடம் கொடுத்தால் அம்மொழி மெல்ல சாகும்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
இக்குறளின் பொருள் அனைவரும் அறிந்ததே.

வார்த்தைதையின் அர்த்தம் அர்த்தமற்றவை
சொல்லின் பொருள் புரிந்தவருக்கு.

இனிமையான எளிமையான தமிழ்ச் சொற்கள் இருக்க கடினமான (கஷ்டமான) ஒட்டுண்ணியை தவிர்ப்போம்.
ஒரு மொழியில் புதுச் சொற்கள் உருவாகுவது இயல்பு. ஆனால் இயல்பில் ஓர் சொல் இருக்க அதற்கு புதிய வார்த்தை உருவாக்குவது அச்சொல்லை நீர்த்துப் போக வைக்கும் செயலே.
இதற்கு எடுத்துக்காட்டு மேலே சொன்ன சொல் - வார்த்தை, பொருள் - அர்த்தம். ஏன் இதை உதாரணமாக அல்லாமல் எடுத்துக்காட்டாய் விளக்குகிறேன் என்றால் உதாரணமே ஓர் ஒட்டுண்ணி. தவறானச் சொல்.

பயன்பாட்டில் உள்ள சொல் ஒட்டுண்ணியா என்ற சந்தேகம் வந்தால் ஐயம் கொள்ள தேவையில்லை, சந்தேகம் ஓர் ஒட்டுண்ணியே.

அப்ப, எப்படி வித்தியாசம் கண்டு பிடிப்பது. ஆம் வித்தியாசத்தை கண்டு பிடித்து விட்டால் நமக்கு வேறுபாடு தெரிய ஆரம்பிக்கும், அப்போது தெளிவு பெறுவோம் வித்தியாசம் ஓர் ஒட்டுண்ணி என்று.

இதெல்லாம் ஒட்டுண்ணி சொற்களா என்று வியப்பு வருகிறதா? வரட்டும் தப்பில்லை பிரமிப்படையா வரையில். காரணம் பிரமிப்பு ஓர் ஒட்டுண்ணியே.

பள்ளிக்கூடங்களில் தமிழில் பேசினால் அபராதம் விதிப்பது தவறு, தண்டம் விதிப்பது சரியா என்றால். இல்லை. ஆனால் தண்டம் சரியான தமிழ்ச் சொல். அபராதம் ஓர் ஒட்டுண்ணி.

தண்டம் தமிழ்ச் சொல் என்றால் தண்டச்சோறும் தமிழ்ச் சொல் தானே. ஆமாம் சாதத்தில் உப்புப் போட்டு உண்ணும் அனைவருக்கும் சோறு தான் முக்கியம், சாதம் அல்ல. சாதம் தவிர்ப்போம், பிரசாதம் அறவே தவிர்ப்போம்.  சாதத்தின் மூலச் சொல் பிரசாதம் என்பதால் தானே அன்றி, இதில் நாத்திகம் ஏதுமில்லை.

விதவை என்னும் சொல்லில் (வார்த்தையில்) பொட்டு இல்லை, தமிழும் அவர்களை கை விட்டுவிட்டதே என்றதுக்கு
(கட்சிக்கு அப்பாற்பட்டு) கலைஞர் ஓர் தமிழ் அறிஞராய் சொன்னது, விதவை ஓர் ஒட்டுண்ணி. கைம்பெண் என்பதே தமிழ்ச் சொல். அதில் ஒன்றுக்கு இரண்டு பொட்டு இருக்கும். தமிழ் யாரையும் கைவிடாது, எப்போதும் கை தூக்கி மட்டுமே விடும் என்று.
சமுதாயத்தின் பார்வையில் மறுமணம் = இரு பொட்டு.
தமிழில் இருப்பது இரு புள்ளி.

இப்போது கட்சியை உட்படுத்தி ஓர் விளக்கம். நாம் தமிழர் சின்னம் (விவசாயி) ஓர் ஒட்டுண்ணி, தமிழ்ச் சொல் அல்ல.
அடங்க மறு, மண்டியிடாத மானம். தமிழர், யார் தமிழர் என்று விதைத்த வினையினால் விளைந்த வினை - கொள்கையில் சமரசம் செய்துக்கொண்டு சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப தமிழ் அல்லாத சொல்லை ஏற்று கொண்ட கட்சி என்ற அவபெயர் தான் மிச்சம்.
உழவனே தமிழ். செய்யும் வினையே பெயராய் இருக்கும் தமிழில்.
உழுவதால் உழவர். Farm - Farmer என்பது போல்.


இவையாவும் ஒட்டுண்ணி சொற்கள், இதை தாண்டி கிரந்தச் சொற்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டுக்கு என் பெயரில் உள்ள 'ஷ' வகைகள். இன்று பலர் கிரந்தச் சொற்களை தவிர்த்து வருகின்றனர், வாழ்த்துக்குரிய செயல். போலவே இவ்வொட்டுண்ணியையும் தவிர்ப்போம்.
பல தமிழ் அறிஞர் சொல்ல கேட்டு அதை கடை பிடிக்க முயலும் கடையன் நான், எனவே
உங்களுக்கு தெரிந்த ஒட்டுண்ணி சொற்களை சொல்லுங்கள். தெரிந்துக்கொள்ள ஆவலுடன் உள்ளேன். ஆசையுடன் அல்ல காரணம் எனக்கு இருக்கும் ஐயம்
ஆசை ஓர் தமிழ்ச் சொல்லா ஒட்டுண்ணியா என்று. விளக்குவோருக்கு நன்றிகள் பல.