More than a Blog Aggregator night writter

Friday, April 3, 2020

சொல்லுக சொல்லை 

தமிழ் சொல்லும் parasite வார்த்தைகளும் 

ஒரு மொழி தோன்றவும் அழியவும் சொல்லே இன்றியமையாதது. பல parasite ஒட்டுண்ணிச்  சொற்களுக்கு ஓர் மொழி இடம் கொடுத்தால் அம்மொழி மெல்ல சாகும்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
இக்குறளின் பொருள் அனைவரும் அறிந்ததே.

வார்த்தைதையின் அர்த்தம் அர்த்தமற்றவை
சொல்லின் பொருள் புரிந்தவருக்கு.

இனிமையான எளிமையான தமிழ்ச் சொற்கள் இருக்க கடினமான (கஷ்டமான) ஒட்டுண்ணியை தவிர்ப்போம்.
ஒரு மொழியில் புதுச் சொற்கள் உருவாகுவது இயல்பு. ஆனால் இயல்பில் ஓர் சொல் இருக்க அதற்கு புதிய வார்த்தை உருவாக்குவது அச்சொல்லை நீர்த்துப் போக வைக்கும் செயலே.
இதற்கு எடுத்துக்காட்டு மேலே சொன்ன சொல் - வார்த்தை, பொருள் - அர்த்தம். ஏன் இதை உதாரணமாக அல்லாமல் எடுத்துக்காட்டாய் விளக்குகிறேன் என்றால் உதாரணமே ஓர் ஒட்டுண்ணி. தவறானச் சொல்.

பயன்பாட்டில் உள்ள சொல் ஒட்டுண்ணியா என்ற சந்தேகம் வந்தால் ஐயம் கொள்ள தேவையில்லை, சந்தேகம் ஓர் ஒட்டுண்ணியே.

அப்ப, எப்படி வித்தியாசம் கண்டு பிடிப்பது. ஆம் வித்தியாசத்தை கண்டு பிடித்து விட்டால் நமக்கு வேறுபாடு தெரிய ஆரம்பிக்கும், அப்போது தெளிவு பெறுவோம் வித்தியாசம் ஓர் ஒட்டுண்ணி என்று.

இதெல்லாம் ஒட்டுண்ணி சொற்களா என்று வியப்பு வருகிறதா? வரட்டும் தப்பில்லை பிரமிப்படையா வரையில். காரணம் பிரமிப்பு ஓர் ஒட்டுண்ணியே.

பள்ளிக்கூடங்களில் தமிழில் பேசினால் அபராதம் விதிப்பது தவறு, தண்டம் விதிப்பது சரியா என்றால். இல்லை. ஆனால் தண்டம் சரியான தமிழ்ச் சொல். அபராதம் ஓர் ஒட்டுண்ணி.

தண்டம் தமிழ்ச் சொல் என்றால் தண்டச்சோறும் தமிழ்ச் சொல் தானே. ஆமாம் சாதத்தில் உப்புப் போட்டு உண்ணும் அனைவருக்கும் சோறு தான் முக்கியம், சாதம் அல்ல. சாதம் தவிர்ப்போம், பிரசாதம் அறவே தவிர்ப்போம்.  சாதத்தின் மூலச் சொல் பிரசாதம் என்பதால் தானே அன்றி, இதில் நாத்திகம் ஏதுமில்லை.

விதவை என்னும் சொல்லில் (வார்த்தையில்) பொட்டு இல்லை, தமிழும் அவர்களை கை விட்டுவிட்டதே என்றதுக்கு
(கட்சிக்கு அப்பாற்பட்டு) கலைஞர் ஓர் தமிழ் அறிஞராய் சொன்னது, விதவை ஓர் ஒட்டுண்ணி. கைம்பெண் என்பதே தமிழ்ச் சொல். அதில் ஒன்றுக்கு இரண்டு பொட்டு இருக்கும். தமிழ் யாரையும் கைவிடாது, எப்போதும் கை தூக்கி மட்டுமே விடும் என்று.
சமுதாயத்தின் பார்வையில் மறுமணம் = இரு பொட்டு.
தமிழில் இருப்பது இரு புள்ளி.

இப்போது கட்சியை உட்படுத்தி ஓர் விளக்கம். நாம் தமிழர் சின்னம் (விவசாயி) ஓர் ஒட்டுண்ணி, தமிழ்ச் சொல் அல்ல.
அடங்க மறு, மண்டியிடாத மானம். தமிழர், யார் தமிழர் என்று விதைத்த வினையினால் விளைந்த வினை - கொள்கையில் சமரசம் செய்துக்கொண்டு சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப தமிழ் அல்லாத சொல்லை ஏற்று கொண்ட கட்சி என்ற அவபெயர் தான் மிச்சம்.
உழவனே தமிழ். செய்யும் வினையே பெயராய் இருக்கும் தமிழில்.
உழுவதால் உழவர். Farm - Farmer என்பது போல்.


இவையாவும் ஒட்டுண்ணி சொற்கள், இதை தாண்டி கிரந்தச் சொற்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டுக்கு என் பெயரில் உள்ள 'ஷ' வகைகள். இன்று பலர் கிரந்தச் சொற்களை தவிர்த்து வருகின்றனர், வாழ்த்துக்குரிய செயல். போலவே இவ்வொட்டுண்ணியையும் தவிர்ப்போம்.
பல தமிழ் அறிஞர் சொல்ல கேட்டு அதை கடை பிடிக்க முயலும் கடையன் நான், எனவே
உங்களுக்கு தெரிந்த ஒட்டுண்ணி சொற்களை சொல்லுங்கள். தெரிந்துக்கொள்ள ஆவலுடன் உள்ளேன். ஆசையுடன் அல்ல காரணம் எனக்கு இருக்கும் ஐயம்
ஆசை ஓர் தமிழ்ச் சொல்லா ஒட்டுண்ணியா என்று. விளக்குவோருக்கு நன்றிகள் பல.



No comments:

Post a Comment